திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

200 படங்களுக்கு மேல் நடித்தும் மோகனுடன் ஜோடி சேராத ஒரே நடிகை.. 51 வயதில் அடித்த ஜாக்பாட்!

வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் திரை உலகையே ஆட்டிப்படைத்த மிகச் சில நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன். ரசிகர்களால் மைக் மோகன் என்று அழைக்கப்படும் இவர் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்றவர்.

இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பல நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது. அதாவது அவர் கிட்டத்தட்ட 17 படங்கள் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் நிகழ்த்த முடியாத பல சாதனையை நடத்திக் காட்டிய மோகன் திடீரென திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. இவர் கடைசியாக 2008ஆம் ஆண்டு சுட்ட பழம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்தப் படம் விமர்சன ரீதியாகவும். வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் அடம் பிடித்த காரணத்தால் அவருக்கு அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

தற்போது மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜயஸ்ரீ இயக்குகிறார். இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க இருக்கிறார்.

இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மோகன் மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடித்ததில்லை. இவர்கள் இருவரும் இணைந்து ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

அதன் பிறகு அவர்கள் எந்த மொழியிலும் இணைந்து நடித்ததில்லை. தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்க இருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப்படம் மைக் மோகனுக்கு ஒரு அதிரடியான திருப்பத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News