வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இளையராஜாவுக்கு கிடைத்த எம்.பி பதவி.. வாழ்த்துக் கூறி கமல் போட்ட ட்விட்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய இன்னிசை பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மனதை வருடும் இவருடைய பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. இவர் இன்றைய இளைய தலைமுறைகளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர்.

இவருடைய சாதனைக்காக இந்திய அரசு பத்மபூஷன், பத்மா விபூஷன் போன்ற விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியது. தற்போது இவருக்கு மேலும் ஒரு கௌரவமாக எம்பி பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த மாநிலங்களவை நியமன எம்பி பதவி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் இந்த பதவி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

மேலும் அவருக்கு இந்த பதவி கிடைத்தது குறித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பாரதிராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தங்கள் வாழ்த்துக்களை இளையராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான கமல் போட்டுள்ள ட்வீட் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலை சாதனைக்காக கௌரவிக்க வேண்டும் எனில் ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்.

இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு கிடைத்த இந்த கௌரவத்தை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பதவியால் ஏக சந்தோஷத்தில் இருக்கும் இளையராஜா தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இளையராஜாவுக்கு வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News