ஜெய்பீம் படம் பார்த்தா தான் அதிருமா?. அஜித்குமார் மரணத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

#JusticeforAjithkumar: திருப்புவனம் பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மரணமடைந்திருப்பது பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு சாத்தான் குளத்தில் நடந்த லாக்கப் மரணத்திற்கு பெரிய அளவில் குரல் கொடுத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

ஊரடங்கு சமயத்தில் கூட தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

திருப்புவனம் லாக்கப் மரணம்

ஆனால் அதே ஆட்சி அதிகாரம் இப்போது திமுக கையில் இருக்கும் பொழுது நடந்த இந்த மரணத்திற்கு இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. அஜித்குமார் மீது எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை.

சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சென்று அவரை இரும்பு கம்பி, பைப் போன்றவை வைத்து அடித்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அடி தாங்காமல் தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு மிளகாய் தூள் தண்ணீரில் கரைத்து வாயில் ஊற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விக்கல் அதிகமாக ஏற்பட்டு அந்த இடத்திலேயே இயற்கை உபாதைகள் வெளியாகி அஜித்குமார் கொடூரமாக இறந்திருக்கிறார். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு அதன் தாக்கம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதாக சொல்லி இருந்தார்.

தற்போது அவருடைய ஆட்சியிலேயே இவ்வளவு கொடூரமான மரணம் ஒரு இளைஞருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என தமிழக மக்கள் கொந்தளித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.