வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ராஜமவுலியின் நீங்காத ஆசை.. ரஜினி, கமல் மனசு வைத்தால் தான் முடியும்

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சங்கர். அவரைப்போலவே பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலமாக உலக அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி.

இன்று இவரின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

பொதுவாகவே ராஜமௌலி ஒரு திரைப்படம் இயக்கினால் அதில் பிரம்மாண்டத்திற்கு குறை இருக்காது. அதேபோன்று பல்வேறு மொழிகளில் இருக்கும் பல முன்னணி நடிகர்களையும் தன் படத்தில் நடிக்க வைத்து விடுவார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும்.

அந்த வகையில் இவர் எடுத்த அத்தனை படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்து இருந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் ராஜமவுலியிடம் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்த ராஜமௌலி தன்னுடைய அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு கருத்தையும் சூசகமாக வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழ் நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது.

அதுவும் தமிழில் இருபெரும் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது அவரின் தீராத வெறி. தற்போது அவர் இதற்கான பிள்ளையார் சுழியையும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது போட்டிருக்கிறார். அதாவது கமல் வில்லனாகவும் ரஜினி ஹீரோவாகவும் வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே இதில் இன்னும் சுவாரசியம்.

தமிழில் பல முன்னணி நடிகர்களும் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது ராஜமௌலி ரஜினி, கமலுடன் இணையவேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார். கூடிய விரைவில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News