சினிமா துறையில் அத்தனை கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களை, சினிமா வித்தகர்கள் என்று தான் கூறுவோம். அப்படி தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று கூறினால் அதை இவரைத்தான் நாம் சொல்ல வேண்டும். ஆமாம், யூகி சேது. சினிமாவை பொறுத்த மட்டில் இவருக்குத் தெரியாத எந்த ஒரு விஷயமும் இருக்க முடியாது. சினிமாவைப் பற்றிய அத்தனை தகவல்களையும் எப்போது கேட்டாலும் சரியாகச் சொல்லக் கூடிய ஒரு நபர். சினிமாவின் மீது அப்படி ஒரு முரட்டுக்காதல் சினிமா மீது இவருக்கு.
சினிமாவில் புதிதாக வரும் தொழில்நுட்பம் ஆரம்பித்து பல தொழில்நுட்பங்கள் வரை எது எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கக் கூடிய மிகச் சிறந்த திறமைசாலி. நடிப்பு மட்டுமின்றி இயக்கம் எழுத்து என அத்தனையிலும் வெளுத்து வாங்க கூடிய இவர் சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்து, இவருக்கு பல தடைகள் வந்து அந்த கனவு நிறைவேறாமல் போனது.இருந்தாலும் இன்று வரை நினைவில் நிறுத்தி கொள்ளும் அளவிற்கு பல செயல்களை சினிமா துறையில் இவர் செய்து இருக்கிறார்.
நடிப்பில் நடிகர் நாசரை எடுத்துக் கொண்டால் அவருக்கு எந்த ஒரு கெட்டப் கொடுத்தாலும் அப்படியே அவருக்கு பொருந்துகிறது என்று ஆச்சரியத்துடன் பார்த்து இருக்கிறோம்.அப்படி ஒரு முக அமைப்பு மற்றும் அப்படி ஒரு நடிப்பு திறமை கொண்டவர். அதே போல சினிமாவில் எந்த விதமான வேலையைக் கொடுத்தாலும் அதை அப்படியே தனக்கு பொருத்திக்கொண்டு அந்த வேலையை மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்யக்கூடியவர் தான் இந்த யூகி சேது.
கலையுலகில் நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் கமலுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக பஞ்சதந்திரம் படத்தில் படம் முழுக்க கமலிடம் இவர் போடும் காமெடி டயலாக்குகள் தியேட்டர்களை ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. அதன் பின் வந்த பம்மல் கே சம்பந்தம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும்,மிக தெளிவாக நேர்த்தியான நடிப்பில் பிச்சு உதறி இருப்பார்.
இதேபோல கமலின் அன்பே சிவம் படத்தில் ஒரு ரயிலில் திடீரென திருட வரும் திருடனாக தோன்றி இருப்பார். அவர் வந்த காட்சிகள் ஒன்றோ, இரண்டோ என்றாலும், இன்று வரை ரயிலில் ஒருவர் திருட வருகிறார் என்றால் நம் மனதில் தோன்றுவது இந்த காட்சி மட்டுமே. அதோடு சேர்த்து கமலுடன் தூங்காவனம் என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார்.
யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான கவிதை பாட நேரமில்லை 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் காதல் என்ன காதல் என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது. பிறகு, 1991ஆம் ஆண்டு வெளியான மாதங்கள் ஏழுஎன்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.இப்படி படங்களில் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிரூபித்து வந்தார் யூகிசேது. அப்படி அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் நையாண்டி தர்பார்.
இந்த நையாண்டி தர்பார் நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அதுவரை ஒரு நிகழ்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முறையை மாற்றி ஃப்ரீ ஸ்டைல் ஆக இவர் தொகுத்து வழங்கிய விதம் அனைவரிடமும் இவரை மிக எளிதாக கொண்டு போய் சேர்த்தது..இப்படி சினிமாவின் அத்தனை அமசங்களையும் கற்றுத்தேர்ந்த யூகி சேது நிஜத்தில் ஒரு சகலகலா வல்லவன் தான்.