வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

2 வருடத்தில் நான் பார்த்த ஒரே விஜய் படம்.. அசத்தலான பதில் கூறிய ராஜமௌலி

ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி தொடங்கப்பட்டது.

மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்காக ராஜமௌலி கிட்டதட்ட 2 வருடம் தன் முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். இதன் படப்பிடிப்பின் போது அவர் வேறு எந்த யோசனையும் இல்லாமல் தன் முழு கவனத்தையும் இதன் மீதே வைத்து படமாக்கியுள்ளார்.

மேலும் பல பிரபல நடிகர்களின் படங்கள் அந்த சமயத்தில் வெளிவந்த போதும் கூட ராஜமவுலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய படத்தின் வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. பின்னர் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட போது கூட நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தினால் பல முன்னணி நடிகர்களும் தங்கள் திரைப்படங்களை வெளியிட தயக்கம் காட்டி வந்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் நடிகர் விஜய் மட்டும் தான் தன்னுடைய மாஸ்டர் படத்தை தைரியமாக வெளியிட்டார். எப்படி இவருக்கு மட்டும் இவ்வளவு தைரியம் இருக்கிறது என்று ராஜமவுலி மிகவும் ஆச்சரியப்பட்டு போயுள்ளார். அந்த ஆச்சரியமே அவரை மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கவும் தூண்டியுள்ளது.

அதன் பிறகு அவர் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துள்ளார். அதில் விஜய்யின் நடிப்பு அவரை மெய்சிலிர்க்க வைப்பதாகவும், அனிருத்தின் இசை அற்புதமாக இருப்பதாகவும் தற்போது ராஜமௌலி கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது.

பலரும் தங்கள் படங்களை வெளியிடத் தயங்கிய போது மாஸ்டர் திரைப்படம் தான் தைரியமாக தியேட்டரில் வெளியானது. இந்த நிகழ்வை அப்போதே பல பத்திரிகைகளும் பாராட்டியது. தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியும் இந்த நிகழ்வை குறிப்பிட்டு விஜய் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

Trending News