ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் தமிழ் திரையுலகில் ஒரு மதிப்பும், மரியாதையுடனும் வலம் வருபவர்கள். இவர்கள் நினைத்தால் எந்த ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சுலபமாக தீர்த்து வைத்து விட முடியும்.
அந்த வகையில் ஒரு காலத்தில் மிகவும் ஒற்றுமையுடன் இருந்த நடிகர் சங்கம் தற்போது இருவேறு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. வயது மூப்பின் காரணமாக மற்றும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் காரணமாகவும் ரஜினி தற்போது அனைத்திலிருந்தும் ஒதுங்கியிருக்கிறார்.
அதேபோன்று கமல் அரசியலில் ரொம்ப பிஸியாக இருக்கிறார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் பொதுவெளிகளில் தலை காட்டுவது கிடையாது. இதனால் இவர்கள் நடிகர் சங்கத்தில் இருக்கும் பிரச்சினையில் தலையிடாமல் விலகி இருக்கின்றனர்.
இவர்கள் மட்டும் ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்தால் நிச்சயம் நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் சரி செய்யப்பட்டு விடும். ஏற்கனவே பொறுப்பில் இருந்த ராதாரவி, சரத்குமார் ஆகியோர் ஊழல் செய்தார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
அதை இளம் நடிகர்கள் துணையுடன் விஷால் மற்றும் நாசர் ஆகியோர் தட்டிக்கேட்டு தேர்தலில் எதிரணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதிலிருந்து சரத்குமாரும் நடிகர் சங்கப் பிரச்சனையில் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். தற்போது நடிகர் சங்கம் விஷால் தலைமையில் ஒரு அணி என்றும் பாக்யராஜ் தலைமையில் மற்றொரு அணியாகவும் இரு துருவங்களாக இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருந்த நடிகர்கள் தற்போது ஆளுக்கொரு பக்கம் சிதறி இருக்கின்றனர். தற்போது இதுதான் நடிகர் சங்கத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இதை உச்ச நட்சத்திரங்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது என்ற ஒரு ஆதங்கமும் துணை நடிகர்களுக்கு இருக்கிறது.
அவர்கள் இதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்தால் நிச்சயம் இந்த பிரச்சனை சரியாகிவிடும். ஆனால் அவர்கள் இதை செய்ய தவறிவிட்டதாக பலரும் மனவருத்தத்துடன் பேசி வருகின்றனர்.