ராமாயணம் கதையை புதிதாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்தியாவில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு ராமர், சீதை, லட்சுமணன், ராவணன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏற்கனவே தெரிந்ததுதான். அப்படி அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையை மீண்டும் திரையில் சொல்லும்போது, கதை என்ன என்பதைக் காட்டிலும் அதை எப்படி காட்டப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய சவால்.
அந்த சவாலை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.
கதை தெரியும்.. ஆனால் சொல்லும் விதம்தான் முக்கியம்!
ராமாயணத்தின் அடிப்படைக் கதை அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் படத்தின் முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், உலகத்தை உருவாக்கவும் அதிக நேரம் எடுத்திருக்கிறார்கள். ராவணனின் பின்னணி, அவனுடைய சக்தி, சிவ பக்தி, இலங்கையின் உலகம், அதன்பிறகு ராமர் பக்கம் நகரும் கதை என படம் மெதுவாக கட்டமைக்கப்படுகிறது.
இதுதான் முதல் பாதியில் கொஞ்சம் பிரச்சனையாகவும் இருக்கிறது. சில காட்சிகளில் “இந்தக் காட்சி இன்னும் கொஞ்சம் சீக்கிரம் முடிந்திருக்கலாமே” என்று தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் பாதிக்கு சென்றதும் படம் வேறு வேகத்தை எடுக்கிறது. குறிப்பாக ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் VFX காட்சிகள் பிரம்மாண்ட அனுபவமாக மாறுகிறது.
ரன்பீர் கபூர்- ராமராக எப்படி?
ரன்பீர் கபூருக்கு ராமர் கதாபாத்திரம் ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கமான சவாலாகவே தெரிகிறது. காரணம், ராமர் கதாபாத்திரத்தை அதிகமாக நடிக்க வாய்ப்பு இருக்காது. அமைதியிலும், கண்களிலும், உடல்மொழியிலும் அந்த கதாபாத்திரத்தை கொண்டு வர வேண்டும்.
அதை ரன்பீர் ஓரளவுக்கு நன்றாக செய்திருக்கிறார். குறிப்பாக ராமர் கோபப்பட வேண்டிய இடங்களிலும், குடும்பத்தை விட்டு பிரியும் தருணங்களிலும், சீதையுடன் இருக்கும் காட்சிகளிலும் அவருடைய நடிப்பு நன்றாக வேலை செய்கிறது.
ஆனால் படத்தின் முழு கவனத்தையும் ரன்பீர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை. சில இடங்களில் மற்ற கதாபாத்திரங்கள் அவரையே மிஞ்சும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் இந்தப் படத்தின் சுவாரஸ்யம்.
சாய் பல்லவி- சீதையாக ஒரு அழகான தேர்வு
சீதையாக சாய் பல்லவி நடித்திருப்பது படத்தின் முக்கியமான ஒன்று. அவரை வெறும் கதாநாயகியாக காட்டாமல், சீதைக்கு தனியாக ஒரு இடம் கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. அமைதியான காட்சிகளில் அவருடைய முகபாவனைகள் வேலை செய்கின்றன. அதே நேரத்தில், கதாபாத்திரத்தின் வலிமையையும் சில காட்சிகளில் வெளிப்படுத்துகிறார்.
யஷ்- இங்கே தான் ராவணன் வேற லெவல்!
இந்தப் படத்தில் அதிகம் பேசப்படும் கதாபாத்திரம் என்றால் அது யஷ் நடித்திருக்கும் ராவணன்தான். ராவணனை வெறும் வில்லனாக காட்டாமல், அவனுடையகோபம், சக்தி, அறிவு, சிவ பக்தி, அரசனுக்கான கம்பீரம் என பல அடுக்குகளை கொடுத்திருக்கிறார்கள்.
யஷின் உடல் மொழி எல்லாமே கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துகிறது. குறிப்பாக அவர் திரையில் வரும் காட்சிகளில் தனியாக தெரிகிறார்.
ரன்பீர் ராமராக கதையின் மையம் என்றால், யஷ் ராவணனாக படத்தின் முக்கிய காட்சிகளை எடுத்துக்கொள்கிறார். ரவி துபேக்கு லட்சுமணன் கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கிறது. ராமரின் மீது இருக்கும் பாசம், கோபம், பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றை சரியான அளவில் வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக லட்சுமணனை வெறும் ராமருடன் வரும் கதாபாத்திரம் என்று வைத்துவிடாமல், அவருக்கும் தனி காட்சிகள் கொடுத்திருப்பது நல்ல விஷயம்.
சன்னி தியோல் ஹனுமானாக இருப்பது முதல் பார்வையிலேயே எதிர்பார்ப்பை உருவாக்கும்.
லாரா தத்தா-வின் கைகேயி, ரகுல் பரீத் சிங் -ன் சூர்ப்பணகை அனைவரும் அட்டகாசம். இதில் குறிப்பாக சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் கைகேசியாக ஷோபனா ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் VFX. DNEG தலைமையிலான VFX வேலை இந்தப் படத்தை சாதாரண படமாக இல்லாமல் ஒரு பெரிய பிரம்மாண்டத்தை காட்டினார்கள். இலங்கை, அசுரர்கள், உயிரினங்கள், போர்கள், வானுலகம் என ஒவ்வொரு உலகத்தையும் உருவாக்கிய விதத்தில் மிகப்பெரிய அளவிலான வேலை தெரிகிறது.
குறிப்பாக ‘ஜடாயு’ படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்று. ஒரு VFX படம் என்றால் “CGI இருக்கிறது” என்று மட்டும் சொல்ல முடியாது. கதாபாத்திரம் அந்த உலகத்திற்குள் உண்மையாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் ராமாயணம் பல இடங்களில் வெற்றி பெறுகிறது.
பங்கஜ் குமார் மற்றும் மகேஷ் லிமையே இருவரின் கேமரா படத்தின் அளவை சரியாக காட்டுகிறது. பெரிய அரண்மனைகள், போர் காட்சிகள், கதாபாத்திரங்களின் என பிரம்மாண்டத்தை கொண்டுவந்தது இவர்கள்தான்.
இசை:
ஹேன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இணைந்திருப்பதால் இசை மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. பின்னணி இசையில் காட்சிகளின் தரத்தை உயர்த்துகிறது. ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணியிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், ஒட்டுமொத்த soundtrack அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
லோகன்ட்வாலா-வின் எடிட்டிங் பெரும்பாலான இடங்களில் நன்றாக இருக்கிறது. சண்டை காட்சிகளில் அதிக கட் செய்யாமல் கொண்டு செல்கிறார். கதாபாத்திரத்தின் மேக்கப் அவர்களின் கதாபாத்திரத்தை கண்முன்னே நிறுத்துகிறது.
நிதேஷ் திவாரியின் பெரிய வெற்றி என்னவென்றால், அனைவருக்கும் தெரிந்த கதையை திரையில் பிரம்மாண்டமாக மாற்றியிருப்பது.
குறைகள் என்று பார்த்தால் முதல் பாதியின் மெதுவான வேகம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவுக்கு இசை முழுமையாக தாக்கம் ஏற்படுத்தாதது.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி:
ராமாயணத்தை வீட்டில் பார்த்து ரசிக்கும் படம் இது இல்லை.
திரையரங்கில் அந்த உலகத்திற்குள் சென்று கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய படம்.




