தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக வேகமாக வளர்ந்து வரும் சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் கென் கருணாஸ் நடிக்கும் இரண்டு புதிய படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் முதலாவதாக, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜன் வகையறா’ படத்தில் கென் கருணாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.’வடசென்னை’ படத்தின் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சாய் அபயங்கர் முதன்முறையாக இசையமைக்க இருப்பது இந்தக் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,’கட்டா குஸ்தி’படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் கென் கருணாஸ் நடிக்கவுள்ள பெயரிடப்படாத புதிய படத்திற்கும் சாய் அபயங்கரே இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு வெவ்வேறு இயக்குநர்களின் படங்களில் கென் கருணாஸ் மற்றும் சாய் அபயங்கர் கூட்டணி அமைந்திருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே ‘கச்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட தனிப்பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் பிரபலமான சாய் அபயங்கர்,பட இசையமைப்பிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், வெற்றிமாறன் மற்றும் செல்ல அய்யாவு போன்ற இயக்குநர்களின் படங்களில் அவர் இணையவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அவரது அடுத்தடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இருப்பினும், இரண்டு திரைப்படங்கள் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் படக்குழுவின் முழுமையான விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.




