விஜயகாந்த் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி, ஹீரோவாகவும், பின்னர் அரசியலிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். ஆனால் அவரது மகன் சண்முக பாண்டியனை பார்க்கும்போது, அந்த இடத்தை நோக்கி அவர் இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் தெரிகிறது.
இதுவரை சண்முக பாண்டியன் நடித்த நான்கு படங்களிலும், விஜயகாந்தின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென்று ஒரு முத்திரையை பதிக்கும் அளவுக்கு பெரிய வெற்றி அவருக்கு அமையவில்லை. இப்போது ‘வானவெடிக்கை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் பார்வையும் வெளியாகிவிட்டது.
ஆனால் ஒரு நடிகருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருவதும், அந்த வாய்ப்புகளை சரியாக தேர்வு செய்வதும் ரொம்ப முக்கியம். குறிப்பாக சண்முக பாண்டியனைப் பொறுத்தவரை கதை தேர்வுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு நடிகரை சந்திக்க வேண்டும் என்றால் மேனேஜர், PRO மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இயக்குநர்கள் அணுக முடியும். ஆனால் சண்முக பாண்டியனை அணுகுவதில் சில கூடுதல் நடைமுறைகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. குடும்பத்தினரின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் முக்கியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சண்முக பாண்டியனிடம் பல இளம் இயக்குநர்கள் நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார்கள் ஆனால் அதற்கு அவருடைய மாமா சுதீஷ் முதலில் ஓகே சொல்ல வேண்டும் பின்பு அவர் அம்மா லதா விஜயகாந்த் ஓகே சொல்ல வேண்டும். அதன்பின்புதான் சண்முக பாண்டியன் கேட்பாராம்.
இதில் குடும்பத்தினர் மீது குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மகனை பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருப்பது இயல்புதான். ஆனால் சினிமா என்பது அப்படியொரு இடம் கிடையாது. ஒரு கதை நன்றாக இருக்கிறதா, அந்த கதாபாத்திரம் நடிகருக்கு பொருந்துமா, அவருடைய மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமா என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.
சண்முக பாண்டியனுக்கு இப்போது தேவை மிகப்பெரிய ஹீரோ இமேஜ் அல்ல. ஒரு சரியான கதை. அந்த ஒரு படம் அவருடைய சினிமா பயணத்தையே மாற்றக்கூடும்.




