வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தமிழ் சினிமாவிற்கே சவால் விடும் சீரியல்கள்.. ஒரு படத்தையும் விட்டு வைக்க மாட்டாங்க போல

சினிமாவில்தான் மற்ற மொழி படங்களை டப்பிங் என்ற பெயரில் வேறு மொழிகளில் எடுத்த படத்தை நடிகர் நடிகைகளையும் மட்டும் மாற்றி கதையை அப்படியே காப்பி அடித்து படமாக்குகிறார்கள். ஆனால் இப்போது கொஞ்சம் கூட கூசாமல் ஏற்கனவே வந்தப் படத்தில் இருக்கும் கதையை அப்படியே ஒரு சில சீரியலில் காப்பியடிப்பதால் சின்னத்திரை ரசிகர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

அதிலும் குறிப்பாக மற்ற சேனல்களை விட விஜய் டிவி கடந்த சில வாரமாக கொஞ்சம் ஓவராகவே போகிறது. ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த ஒரு மாதமாகவே ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற படத்தின் கதையை அப்படியே மீண்டும் சீரியலில் கொண்டு வந்து இதயத்தை இடமாற்றம் செய்யும் பரபரப்பான காட்சிகளை இந்த சீரியலிலும் காண்பித்து எரிச்சலடைய செய்தனர்.

இருந்தாலும் சீரியல் என்றாலே செண்டிமெண்ட் தான். அதுக்குன்னு இப்படியா காப்பி அடிக்கிறது என சின்னத்திரை ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியலை கடந்த சில வாரமாக சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்க்கின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலும் தற்போது ஆரம்பித்துவிட்டது.

இதில் சூர்யா-திரிஷா நடிப்பில் வெளியான ‘ஆறு’ படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகளை சீரியலில் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் அபி மெடிக்கல் ஷாப்பில் வெற்றிக்காக வாங்கிய மருந்தை கொடுக்க மறுத்த கடைக்காரரிடம் இருந்து மருந்துகளை தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடி வருவது போன்ற சீன் வைத்திருப்பது ஆறு படத்தை அப்படியே காப்பியடிப்பது பச்சையாகத் தெரிகிறது.

அதேபோன்று ஈரமான ரோஜாவே 2 சீரியலிலும் பிடிக்காத திருமணத்தை பெற்றோர்களுக்காக செய்துகொண்டு திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற வேண்டும் நோக்கத்தில் ஆறு மாத இடைவெளியில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அதன் பிறகு காதலிக்க ஆரம்பித்தது போல் காண்பிக்கப்படும். இந்த காட்சிகளும் மோகன்-ரேவதி நடித்த ‘மௌன ராகம்’ அதைத் தொடர்ந்து அந்தப் படத்தை அப்படியே காப்பியடித்த ஆர்யா-நயன்தாராவின் ‘ராஜா ராணி’ படத்தைப் பார்ப்பது போலவே ஈரமான ரோஜாவே 2 சீரியலின் கதை இருக்கிறது.

மேலும் ராஜா ராணி 2 சீரியலும் ஏற்கனவே விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலில் தமிழாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களை அப்படியே சீரியல் ஆக எடுப்பதால் சீரியல் இயக்குனர்களை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வசைபாடி வருகின்றனர்.

Trending News