ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து சொதப்பிய நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் மிக கம்மியான பட்ஜெட்டில் தன்னை நிரூபித்த நடிகர்களும் உள்ளனர். அவ்வாறு குறைந்த பட்ஜெட் படங்களின் மூலம் வளர்ந்த 7 ஹீரோக்களை தற்போது பார்க்கலாம். மேலும் அந்த படங்களின் பெயர்களே அந்த ஹீரோக்களுக்கு அடையாளமாகவும் அமைந்துள்ளது.
முரளி : தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் முரளி. இவர் பூவிலங்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது இதயம் படம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதயம் முரளி என்று இவர் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
ஜெயம் ரவி : தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ரவி நடிப்பில் வெளியான முதல் படம் ஜெயம் ரவி. இப்படம் மிக கம்மி பட்ஜெட்டில் காதல் படமாக எடுக்கப்பட்டிருந்தது. முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஜெயம் ரவி. அதன்பின்பு தற்போது மாஸ் நடிகராக உள்ளபோதும் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
விஜய் சேதுபதி : ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தாலும் விஜய்சேதுபதியை ஹீரோவாக நிலைநிறுத்திய படம் பீட்சா. மிக கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை உச்சக்கட்ட பயத்தில் ஆழ்த்தியது. அதிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு அட்டகாசம். அதன் பின்பு பீட்சா விஜய் சேதுபதி என்றே அழைக்கப்பட்டார். ஆனால் தற்போது எட்டமுடியாத உயரத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயன் : சின்னத்திரையில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். இவருடைய முதல் படமே காதல் கலந்த யதார்த்தமான படமாக அமைந்து இருந்தது. இப்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.
தினேஷ் : முதலில் தினேஷ் என்று சொன்னால் யார் என்று எல்லோருமே குழம்புவார்கள். ஏனென்றால் அவருக்கு அடையாளம் கொடுத்த படத்தின் அடைமொழியோடு சொன்னால்தான் அனைவராலும் அறியப்படும். அதாவது குறைவான பட்ஜெட்டில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் தினேஷுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அவர் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
விமல் : இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் யாரிடத்திலும் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. அதன்பின்பு களவாணி படம் ரசிகர் மத்தியில் விமலை மிகப் பிரபலமாக்கியது. இப்படம் சாதாரண திரைக்கதையாக இருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் தொடர்ந்து கம்மி பட்ஜெட் படங்களையே விமல் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
கலையரசன் : அட்டகத்தி, மத யானை கூட்டம் என பல படங்களில் நடித்துள்ளார் கலையரசன். ஆனால் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் கலையரசனின் அன்பு கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திலிருந்து மெட்ராஸ் கலையரசு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.