புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருடனுக்கு தேள் கொட்டியதாய் முழிக்கும் மித்ரா.. உண்மை புரியாமல் அன்பை வெறுக்கும் ஆனந்தி

Singapenne serial: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் ஒரு வழியாக பார்ட்டி முடிந்து எல்லோரும் அடுத்த நாள் ஆபீசுக்கு வந்து விட்டார்கள். ஒரு பக்கம் பார்ட்டியின் இரவில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் ஆனந்தி மற்றும் மகேஷ். இன்னொரு பக்கம் ஆனந்தி தன்னை தவறாக நினைத்து விட்டாலே என மன கஷ்டத்தில் அன்பு சுற்றிக்கொண்டு இருக்க, மித்ராவோ பார்ட்டி இரவில் மகேஷ் மற்றும் ஆனந்தி ஒரே ரூமில் இருந்தது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என பயத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அன்பு வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே எப்படியாவது இன்னைக்கு ஆனந்தி இடம் தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபித்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அம்புவின் அம்மாவுக்கு வந்து, அவனிடம் எதுவுமே கேட்காமலேயே உனக்கென்ன ஒன்னு இருந்தா அது கண்டிப்பா உன்கிட்ட வந்து சேரும் என்று சொல்கிறார். இது அன்புக்கு ஒரு மிகப்பெரிய மன தைரியத்தை கொடுக்கிறது.

ஊருக்கு கிளம்பும் மித்ராவின் அம்மா சத்யா ஆனந்தியையும் வந்து பார்த்துவிட்டு போகிறார். அதைத் தொடர்ந்து ஆனந்தியும் ஆபீசுக்கு போய் விடுகிறாள். அங்கு ஏற்கனவே மகேஷ் பார்த்தியில் அவளிடம் காதலை சொல்ல முடியவில்லை என்று கவலையில் இருக்கிறான். அந்த நேரத்தில் ஆனந்தி அங்கு வர மகேஷ் தன் காதலை சொல்ல முற்படுகிறான், ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவனால் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.

ஆனந்தியும் கார்மெண்ட்ஸ்க்கு போய் விடுகிறாள். அங்கு அவளைப் பார்த்ததும் அன்பு அந்த இரவு நடந்ததை பற்றி சொல்லியே ஆக வேண்டும் என்று முயற்சி செய்கிறான். ஆனால் ஆனந்தி அவனை பேசவிடாமல் ரொம்பவும் மோசமான வார்த்தைகளை பேசி அவனை கஷ்டப் படுத்துகிறாள். அப்போது முத்து மற்றும் ஆனந்தியின் தோழிகள் அன்புக்கு சப்போர்ட் செய்து, ஆனந்தியிடம் அன்புவை பற்றி அப்படி பேசாதே என்று எச்சரிக்கிறார்கள்.

அன்பை வெறுக்கும் ஆனந்தி

உடனே அன்பு எனக்காக நீங்க யாருமே சப்போர்ட் செய்ய வேண்டாம், தேவையில்லாமல் அவளுக்கு எதிரியாக ஆகி விடாதீர்கள், நான் ஆனந்தியிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லி மூன்று பேரையும் அனுப்பி விடுகிறான். அதை தொடர்ந்து ஆனந்தியிடம் நேற்று இரவு உன்னை கொல்வதற்கு சதி நடந்தது என்று சொல்கிறான். ஆனால் ஆனந்தி அதை நம்புவதாகவே இல்லை, உடனே அன்பு நான் இதை கண்டிப்பாக நிரூபித்து காட்டுகிறேன் என்று கோபத்துடன் சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மித்ரா மற்றும் மகேஷ் எல்லோரையும் கூப்பிட்டு பார்ட்டி இரவன்று ஆனந்தியை கொலை செய்வதற்கான திட்டம் நடந்ததாக சொல்கிறான். இதைக் கேட்ட மித்ராவுக்கு தலையே சுற்றிவிடும் போலிருக்கிறது. அந்த நேரத்தில் ஆனந்தி இல்லை இவன் பொய் சொல்கிறான் என்று மீண்டும் அன்புவை கோபப்படுத்துகிறாள். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அன்பு கண்டிப்பாக இதை நான் ஆதாரத்தோடு நிரூபித்து காட்டுவேன் என எல்லோர் முன்னிலையிலும் சொல்வது போல் ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

Trending News