Kurangu Pedal Review: தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார். அதில் தற்போது உருவாகி இருக்கும் குரங்கு பெடல் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை கண்முன் அப்படியே காட்டியிருக்கிறது.
கமலக்கண்ணன் இயக்கத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், ராகவன் என பலர் நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம். கிராமத்தில் வாழும் காளி வெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.
அதனால் எல்லா இடத்துக்கும் அவர் நடந்தே போகிறார். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் அவரை கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் வருத்தப்படும் அவருடைய மகன் அப்பாவை போல் இல்லாமல் சைக்கிள் ஓட்ட வேண்டும் என உறுதி எடுக்கிறான்.
குரங்கு பெடல் விமர்சனம்
அதனால் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு குரங்கு பெடல் போட்டு முயற்சி செய்கிறான். இதை பலரும் கிண்டல் செய்தாலும் தன் முயற்சியில் அந்த சிறுவன் கவனமாக இருக்கிறான்.
இதற்காக வீட்டில் திருடுவது அப்பாவிடம் அடி வாங்குவது என சைக்கிள் ஓட்ட பழகுகிறான். ஒருநாள் வாடகை சைக்கிள் எடுத்து சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை.
அவனை தேடிச்செல்லும் காளி வெங்கட் மகனை கண்டுபிடித்தாரா? வாடகை சைக்கிள் என்ன ஆனது? என்பதுதான் இந்த குரங்கு பெடலின் கதை. பள்ளிக்கு லீவு விட்டாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.
சிவகார்த்திகேயனின் புது முயற்சி
அதுவும் கிராமத்து பிள்ளைகளை சொல்லவே வேண்டாம். கிணற்றில் நீச்சல் அடிப்பது, கோழி குண்டு விளையாடுவது, குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவது என அனைத்தையும் இப்படம் கண் முன் காட்டி இருக்கிறது.
அதேபோல் கிராமத்து வாழ்க்கையையும் ஒளிப்பதிவாளர் அழகாக காட்டியுள்ளார். அதற்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் பலன் தரும் வகையில் சிறுவர்களின் நடிப்பும் உள்ளது.
ஆனால் அங்கங்கு நீளமான காட்சிகள் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. அதையெல்லாம் சிறுவர்களின் துருதுறு நடிப்பும் கதையோட்டமும் மறக்கடிக்க செய்து விடுகிறது.
ஆக மொத்தம் சிவகார்த்திகேயனின் இந்த படைப்பு இந்த சம்மருக்கான படமாக இருக்கிறது. அதனால் இந்த குரங்கு பெடலை நிச்சயம் தியேட்டரில் ஒரு முறை பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5