வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை.. மனோரமாவுக்கு அடுத்தபடியாக சினிமாவை ஆட்சி செய்தவர்

சினிமாவைப் பொருத்தவரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடிப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அந்தவகையில் ஆச்சி மனோரமா எம்ஜிஆர், சிவாஜி உடன் நடித்து அதன் பிறகு ரஜினி, கமல் படங்களில் நடித்துள்ளார். அதற்கு அடுத்த தலைமுறைகள் ஆன விஜய், அஜித் படங்களிலும் மனோரமா நடித்துள்ளார்.

ஒரு படி மேலே சொன்னால் நான்காவது தலைமுறைகளான விஷால் போன்ற இளம் நடிகர்களின் படங்களிலும் மனோரமா நடித்துள்ளார். ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரு நடிகை உள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி. 60, 70 களில் சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆருடன் நம் நாடு, சிவாஜியுடன் பாரத விலாஸ் போன்ற பல படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.

அதன்பிறகு 80, 90 களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். கமலுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகை என்ற பெருமையும் ஸ்ரீதேவிக்கு உண்டு. கமலுடன் இணைந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாணராமன், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது தலைமுறைகளான அஜித், விஜய் படங்களிலும் ஸ்ரீதேவி நடித்து அசத்தி உள்ளார். அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும், விஜய்யுடன் புலி படத்திலும் ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் ஹிந்தி பட வாய்ப்பு கிடைக்க பாலிவுட்டிலும் தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை தந்து வந்தார்.

மூன்று தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்த ஸ்ரீதேவி கடந்த 2018 இல் உயிரிழந்தார். அவரது இழப்பு சினிமா துறைக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் அழகு, திறமை என அனைத்தும் இருந்தாலும், ஒரு கால கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், அதன் பிறகு அவர்களது மார்க்கெட்டில் இறங்கிவிடும். ஆனால் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவை கட்டி ஆண்டவர்.

Trending News