வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
டைம் லூப் சம்பந்தமான கதை அமைப்பைக் கொண்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. சிம்புவின் திரைப்படங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்தது. அதிலும் இப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
மேலும் மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றோடு 75 நாட்கள் கடந்து விட்டது. இந்த நிகழ்வை சிம்புவின் ரசிகர்கள் உட்பட பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது மாநாடு திரைப்படம் வெளியாகி 75 நாட்கள் ஆகிறது. இதை அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் 75 நாட்கள் கடந்தும், இன்னமும் விநியோகஸ்தர்கள் என்னிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை.
ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைமை என்றால், மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல. இப்படி இருந்தால் நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போவதில் என்ன தப்பு என்று நினைக்கும் படி இருக்கிறது என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும் மாநாடு படம் தொடர்பாக ஜிஎஸ்டி தொகையும் மற்றும் 50 லட்சம் பணமும் வினியோகஸ்தர்கள் சைடில் இருந்து இன்னமும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வந்து சேரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒரு தயாரிப்பாளராக அவரின் இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.