சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

டி ராஜேந்தர் கொடுத்த தரமான 5 ஹிட் படங்கள்.. பெண்களைக் கவர்ந்த திரைப்படங்கள்

80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் டி ராஜேந்தர். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்துதான் படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை உடைத்து காட்டிய பெருமை இவருக்கு உண்டு.

புதுமுகங்களை வைத்து எதார்த்தமான கதையை மக்கள் விரும்பும் வகையில் கொடுத்து தன் திரைபயணத்தை ஆரம்பித்த இவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி சக்கை போடு போட்டது.

அந்தப் படங்கள் அனைத்தும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை. மேலும் அதில் இடம்பெற்ற பாடல்களுக்காகவே இவருடைய படங்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தரமான 5 திரைப்படங்களை பற்றி காண்போம்.

உயிருள்ளவரை உஷா டி ராஜேந்தர் இயக்கி நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து சரிதா, நளினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி ராஜேந்தரின் சொந்த தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அனைவரையும் கவர்ந்தது.

என் தங்கை கல்யாணி நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இந்தப் படத்தில் டி ராஜேந்தர், சுதா, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் டி ராஜேந்தருக்குஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

மைதிலி என்னை காதலி டி ராஜேந்தர் மற்றும் அமலா இருவரின் நடிப்பில் வெளியான காதல் காவியம் இது. இப்படத்தில் பல உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இப்படம் வெளியான சமயத்தில் இல்லத்தரசிகளை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வெற்றி பெற்றது.

எங்க வீட்டு வேலன் ராஜீவ், ரேகா, சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சினையும், அதன் விளைவுகளைப் பற்றியும் காட்டப்பட்டிருக்கும். குடும்பங்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.

மோனிஷா என் மோனலிசா புதுமுகங்களான ராமன்காந்த், மும்தாஜ், ரவி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படமும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். காதலியிடம் முகத்தை காட்டாமல் விளையாடும் ஹீரோ இறுதியில் மரணம் அடைவது போன்று இப்படம் எடுக்கப்பட்டு இருக்கும். இதில் ஹீரோயினாக அறிமுகமான மும்தாஜ் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் ஒரு ரவுண்டு வந்தார்.

Trending News