திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தறிகெட்டுப் போகும் தமிழ் சினிமா.. சமுதாயத்தை சீரழிக்கும் தனுஷ், சிம்பு படம்

அந்த காலகட்டத்தில் எல்லாம் திரைப்படங்களை பெரியவர்கள் மட்டும்தான் பார்த்து ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. விளையாட்டில் தான் தங்கள் நேரத்தை அதிக அளவில் செலவழித்து வருவார்கள். ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது ஸ்மார்ட் போன், இன்டர்நெட் போன்றவற்றை குழந்தைகளும் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் சினிமாக்கள், வீடியோக்கள் என்று அனைத்தையும் அவர்கள் பெரியவர்களுக்கு இணையாக பார்க்கின்றனர். அப்படி ஒரு சினிமாவை அவர்கள் பார்க்க நேரிடும் போது அதில் வரும் சில காட்சிகளையும் ஆர்வமாக செய்து பார்க்கிறார்கள். தங்களுக்கு பிடித்த ஹீரோ சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை அவர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

இது வருங்கால சமுதாயத்திற்கு பெரும் சீரழிவாக இருக்கிறது. அந்தக் காலத்தில் ரஜினி சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதை பலரும் ரசித்தனர். சில காலங்களுக்கு பிறகு அது ரசிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அப்படி ஒரு காட்சியை திரைப்படங்களில் வைக்க பல இயக்கங்களும் போர்க்கொடி தூக்கியது.

அதன் விளைவாக பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களில் அது போன்று காட்சிகளை வைப்பதை நிறுத்தி விட்டார்கள். அதேபோன்று கதைக்கு தேவைப்பட்டால் அதுபோன்ற காட்சிகள் வைக்கப்படும். அந்த சமயத்தில் அந்தக் காட்சிக்கு கீழே புகைபிடிப்பது, மது அருந்துவது உடலுக்கு கேடு என்ற விளம்பரம் வரும். சின்னத்திரை சீரியல்களில் கூட இந்த விளம்பரம் வருகிறது.

ஆனால் சமீபகாலமாக சில திரைப்படங்களில் இதுபோன்ற விளம்பரத்தை நாம் பார்க்க முடிவதில்லை. சில நாட்களுக்கு முன் தனுஷின் மாறன் படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. அந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அமீர் போன்றவர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட காட்சிக்கு கீழ் எந்த ஒரு விளம்பரமும் வரவில்லை.

ஒருவேளை படம் தியேட்டரில் வெளியாகாததால் தான் இப்படிச் செய்கிறார்களோ என்னவோ. அதேபோன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா அறிமுக காட்சியில் புகை பிடித்துக் கொண்டு தான் வருவார். அப்போதும் இந்த மாதிரி விளம்பரங்கள் கீழே காட்டப்படவில்லை.

மேலும் இதுபோன்ற காட்சிகளுக்கு தற்போது சென்சார் போர்டு எந்த தடையும் விதிப்பதில்லை. இது இன்றைய சமுதாயத்தை மட்டும் அல்லாமல் வருங்கால சமுதாயத்தையும் சீரழிக்கும் வகையில் உள்ளது. இனியாவது ஹீரோக்கள் தங்கள் படங்களில் இதை கவனிப்பார்களா என்று பார்ப்போம்.

Trending News