தமிழ் படம் என்றாலே தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு கொஞ்சம் பயம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவையே கலாய்த்து எடுத்த படம்தான் தமிழ் படம்.
நடிகர் சிவாவுக்கும் இயக்குநர் சி.எஸ்.அமுதனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படமும் இதுதான். 2010-ல் வெளியான முதல் பாகம், தமிழ் சினிமாவில் அப்போது இருந்த பல படங்களையும், ஹீரோக்களின் வழக்கமான காட்சிகளையும் நையாண்டி செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன்பிறகு வெளியான இரண்டாம் பாகமும் அதே பாணியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஸ்பெஷல் காட்சிகள் போடும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழ் சினிமாவையே இப்படி வெளிப்படையாக கலாய்த்து எடுக்கும் படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது தமிழ் படம் 3 பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இதனால், இந்த முறை அமுதன் யாரையெல்லாம் கலாய்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
முன்பு போலவே தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுகள், ஹீரோக்களின் மாஸ் காட்சிகள் மற்றும் திரைப்படங்களின் பாணியை வைத்து மீண்டும் ஒரு கலக்கலான நையாண்டி படத்தை கொடுப்பாரா அமுதன் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.




