Actor Marimuthu: ஆதி குணசேகரன் என்னும் கேரக்டரில் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த சீரியலுக்கு பின்னர் தான் ரசிகர்களால் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். மேலும் எதிர்நீச்சல் சீரியலின் மற்ற கேரக்டர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான்.
ஆணாதிக்க எண்ணம் அதிகம் இருந்தாலும் அதில் ஒரு வில்லத்தனமும், நகைச்சுவையும் கலந்து அளவாக நடிக்கும் மாரிமுத்துவுக்கு ரசிகர்கள் அதிகம். முதன் முதலில் சீரியலில் நடிக்கும் வில்லனை நேயர்களுக்கு பிடிக்கிறது என்றால் அது இவராகத்தான் இருக்கும். இவர் சொல்லும் ‘இந்தாம்மா ஏய்’ என்ற வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டில் இருக்கிறது.
மாரிமுத்து முதன் முதலில் சினிமாவுக்குள் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்திருக்கிறார். உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இயக்குனர்கள் ராஜ்கிரண், சீமான், ராஜீவ் மேனன், எஸ் ஜே சூர்யா, சிம்பு, என பலரது படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என்ற இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து பணிபுரிந்து இருக்கிறார். அப்போது அவருக்கு சம்பளம் 1500 ரூபாய் மட்டுமே. இந்த படத்தில் தான் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவும் உதவி இயக்குனராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் எஸ் ஜே சூர்யா இயக்குனராக வாலி மற்றும் குஷி படங்களை இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றி இருக்கிறார். அப்பொழுது தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறக்க இருந்த நேரத்தில் பிரசவத்திற்கு கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார் மாரிமுத்து. அந்த நேரத்தில் தான் எஸ் ஜே சூர்யா மொத்த மருத்துவமனை செலவையும் பார்த்து அவருக்கு உதவி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்த மாரிமுத்து அந்த ஆசை கை கொடுக்காததால் கிடைத்த கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் அவருடைய வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டு விட்டது. இன்று அவரை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல சினிமா பிரபலங்கள் தாங்கள் விரும்பி பார்ப்பதாக சொல்லி இருப்பதோடு, இவருடைய நடிப்பையும் பாராட்டி இருக்கின்றனர்.