Ethirneechal Marimuthu: வாழ்க்கையில் அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கிறது நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம். அரை மணி நேரத்தில் மொத்த வாழ்க்கையும் முடிந்து, தன்னுடைய 57வது வயதில் மரணம் அடைந்து இருக்கிறார் எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரன்.
மாரிமுத்துவுக்கு இந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்த விஷயம் கிடையாது. சினிமாவில் சாதிக்க போகிறேன் என்று வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, ஒரு வெற்றியை பார்க்க 50 வயதுக்கு மேல் தான் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. முதன்முதலில் இவர் பாடலாசிரியர் வைரமுத்துவின் உதவியாளராக தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
சினிமா உலகில் முன்னணி இயக்குனர்கள் பலரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு, கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என்ற இரண்டு படங்களை இயக்கிய இவருக்கு அதுவும் செட் ஆகாததால், கிராமப்புறம் சார்ந்த கதைகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருடைய திறமையை சரியாக புரிந்து கொண்ட இயக்குனர் திருச்செல்வம் கொடுத்த வாய்ப்பு தான் ஆதி குணசேகரன் கேரக்டர்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்த சினிமா கொடுக்காத வெற்றியை சின்னத்திரை இவருக்கு வாரி வழங்கியது. ஆதி குணசேகரன் கேரக்டரில் வாழ்ந்து காட்டினார் மாரிமுத்து. இருந்தாலும் இது வில்லன் கேரக்டர் என்பதால், மாரிமுத்துவின், அக்கா வேலை செய்யும் இடங்களில் ஏன் உன் தம்பி இப்படி நடிக்கிறார் என கேட்பார்களாம்.
அந்த இடத்தில் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வரும் அவருடைய அக்கா, மாரிமுத்துவுக்கு போன் செய்து நீ ஏன் இப்படி நடிக்கிறாய், கொஞ்சம் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டியது தானே என்று சொல்லுவாராம். அதற்கு மாரிமுத்து இந்த நடிப்புக்காக நான் நிறைய விருது வாங்கி வருகிறேன், நீ வேணா பாரு ஐந்து வருடத்தில் நான் பெரிய ஆளா வருவேன், நீ வேடிக்கை மட்டும் பாரு, என்னுடைய நாடகத்தையும் தொடர்ந்து பாரு என சொல்லியிருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தான் ஆசை ஆசையாக ஒரு வீடு கட்டி வருவதாகவும், அந்த வீட்டில் படுத்து தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார். இப்படி பல கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் வாழ்க்கை, சட்டென முடிந்தது அவருடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது.