80, 90 காலகட்டங்களில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சத்யராஜ் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு அவ்வளவாக டான்ஸ் ஆட தெரியாது. அதனால் அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அவர் தட்டு தடுமாறி தான் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் நடிகை சில்க் ஸ்மிதாவுடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் ராமநாராயணன் இயக்கிய சட்டத்தை திருத்துங்கள் என்ற திரைப்படத்தில் மோகன், சத்யராஜ், நளினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
அந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு பாடல் காட்சி சத்யராஜ் சிலுக்குடன் நடனமாடும் படி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது சிலுக்குடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த சத்யராஜ் தெரியாமல் தவறுதலாக அவருடைய காலை மிதித்து விட்டாராம்.
இதனால் கடுப்பான சில்க் இனிமேல் நான் அவருடன் டான்ஸ் ஆடவே மாட்டேன் என்று கோபமாக கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன இயக்குனர் உடனே அவரை சமாதானப்படுத்தி அவருக்கு நடனம் ஆட தெரியாது என்று கூறியிருக்கிறார்.
மேலும் இனிமேல் இப்படி நடக்காது என்று மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அதன் பிறகு ஒரு வழியாக சமாதானமான சில்க் அந்த காட்சியில் நடனமாடி கொடுத்திருக்கிறார். இப்படி மோதலுடன் ஆரம்பித்த அவர்களுடைய சந்திப்பு போக போக நல்ல நட்பாக மாறி இருக்கிறது. அதன் பிறகு சில்க் ஒரு திரைப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.