மீண்டும் களமிறங்கும் தமிழா தமிழா.. கரு. பழனியப்பனை கழட்டிவிட்டு தொகுத்து வழங்கப் போவது இவர்தான்

Zee Tamil – Tamizha Tamizha: சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக பல நிகழ்ச்சிகளை கொண்டு வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். இந்த சேனலின் நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக ஜீ தமிழ் கொண்டு வந்த நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இதை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது.

இயக்குனர்கள் பார்த்திபன் மற்றும் எழில் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் கரு.பழனியப்பன். இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதமே ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. மேலும் பேச்சாளர்களை இவர் ஒருமையில் பேசுவதாகவும், ஒரு சாராருக்கு பரிந்து பேசி மற்றவர்களை காயப்படுத்துகிறார் என்று கூட சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டிருந்தது.

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பழனியப்பன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், சுயமரியாதை, சமூக நீதி, திராவிடம் போன்றவற்றை பேசுவது கசப்பாக இருக்கும் எனில் அந்த இடத்தில் இருந்து விலகுவதே சரி என்று பதிவிட்டு தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

இயக்குனர் கரு.பழனியப்பன் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பப்படாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொடர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நிறைய மக்கள் கோரிக்கையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்படுகிறது.

பிரபல தனியார் ஊடகத்தில் பணிபுரிந்த ஆவுடையப்பன் என்பவர் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பல பிரபலங்களை பேட்டி எடுத்து மக்களிடையே பரிச்சயமானவர் இவர். இவருடைய தொகுப்பு வர்ணனைக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டமே உண்டு. இவர்தான் இப்போது கரு. பழனியப்பனுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவும் வெளியிடப்பட்டு விட்டது.

ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு விலகிய கரு.பழனியப்பன் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் வா தமிழா வா என்னும் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →