வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இரண்டே மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 8 திரை பிரபலங்களின் மறைவு.. பேரதிர்ச்சியை கொடுத்த மயில்சாமி

புத்தாண்டு துவங்கிய இரண்டே மாதத்தில் அடுத்தடுத்து வரிசையாக பிரபலங்கள் மரணித்தது திரை உலகையே உலுக்கியது. அதிலும் 57 வயதே ஆனா மயில்சாமியின் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ராமதாஸ்: தமிழ் சினிமாவில் சுமார் 6 படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ராமதாஸ், அதன் பிறகு நடிகராக நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர். அதிலும் 2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்து காட்டி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். இவர் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தன்னுடைய 66-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு ரசிகர்கள் பலரையும் வேதனைப்படுத்தியது.

ஜூடோ ரத்தினம்: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1200-க்கு மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணி புரிந்தவர் ஜூடோ ரத்தினம். இவர் அதிக படங்களில் பணியாற்றியதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்து, அவர்களை மாஸ் நடிகராக உருவெடுத்ததற்கும் இவர்தான் முக்கிய காரணம். இவர் தனது 93-வது வயதில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

Also Read: தான தர்மம் போக மயில்சாமி சேர்த்து வைத்த சொத்துக்களின் மொத்த மதிப்பு.. குடும்பத்தையும் நல்லா பாத்துகிட்ட மனுஷன்

ஜமுனா: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா, தன்னுடைய 86-வது வயதில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர் தமிழில் 1954-ல் வெளியான பணம் படுத்தும் பாடு என்கின்ற படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு 1955-ல் வெளியான மிஸ்ஸியம்மா என்ற படத்தின் மூலம் புகழை அடைந்தார். அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் என்ற படத்தில் இடம்பெற்ற ‘அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்’ என்கின்ற பாடலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார். இப்படி, அந்த காலத்து ரசிகர்களை வசியம் செய்த ஜமுனாவின் மறைவு திரை உலகிற்கு ஏற்பட்ட இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

நெல்லை தங்கராஜ்: ஜாதியை ரீதியிலான சமூக அநீதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து புகழ்பெற்றவர் நெல்லை தங்கராஜ். இவர் கதாநாயகனின் அப்பாவாக தெருக்கூத்து கலைஞராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 3-ம் தேதி இயற்கை எய்தினார்.

Also Read: டிபி கஜேந்திரன் இயக்கிய சூப்பரான 5 படங்கள்.. காமெடி மட்டுமில்ல படமும் செம லிஸ்ட்

கே விஸ்வநாத்: 1965 ஆம் ஆண்டு ஆத்ம கௌரவம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான லெஜன்ட் கே விஸ்வநாத், அதன்பிறகு பல படங்களை இயக்கி சிறந்த இயக்குனருக்கான 7 முறை நந்தி விருதையும், இந்தியாவில் மிக உயரிய விருதான தாதா சாகோ பால்கே விருதையும் பெற்றது மட்டுமின்றி 5 முறை தேசிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் 11 முறை ஃபிலிம் ஃபேர் அவார்டும் பெற்றிருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, லிங்கா, சிங்கம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்த கலக்கி இருப்பார். கமல்ஹாசன் தன்னுடைய குருவாக பார்க்கக்கூடிய கே. விஸ்வநாத் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

வாணி ஜெயராம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். 1970ல் தனது சினிமா பயணத்தை தொடங்கிய வாணி ஜெயராம் இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருதை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய படுக்கையில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திடீரென்று மரணித்தது திரை உலகிற்கு பேரதிர்ச்சியை தந்தது.

Also Read: பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒரே வாரத்தில் சோகம்.. வாணி ஜெயராம் குரலில் மறக்க முடியாத 10 பாடல்கள்

டி பி கஜேந்திரன்: கோலிவுட்டில் குடும்பப் பாங்கான கதைகளையும் கதாபாத்திரங்களையும் மிக அருமையாக கையாண்ட இயக்குனரும் நடிகருமான டி பி கஜேந்திரன் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி இயற்கை எய்தினார். இவருடைய மரணம் திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் துயரச் செய்தியாக அமைந்தது.

மயில்சாமி: காமெடி நடிகராகவும், பல குரல் மன்னனாகவும் தமிழ் சினிமாவை கலக்கிய குணச்சித்திர நடிகர் மயில்சாமி பிப்ரவரி 19 ஆம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து வீடு திரும்பிய பிறகு திடீரென்று அவரது மரணம் ஏற்பட்டிருக்கிறது. இது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை தந்தது.

இவ்வாறு 2023 ஆம் ஆண்டு துவங்கிய இரண்டே மாதத்தில் அடுத்தடுத்து பிரபலங்கள் வரிசையாக மரணித்தது ரசிகர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் மயில்சாமியின் மறைவு செய்தி பேரதிர்ச்சியை தந்தது.

Trending News