விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள‘புருஷன்’படத்தின் வியாபாரம் தற்போது சிக்கலைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில்,அதன் தாக்கம் புருஷன் படத்தின் மார்க்கெட்டிலும் எதிரொலிப்பதாகச் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பொதுவாக ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும்போது,அதன் விநியோக உரிமையைக் கைப்பற்றுவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி இருக்கும்.ஆனால் புருஷன் படத்தைப் பொறுத்தவரை இதுவரை மினிமம் கியாரண்டி அடிப்படையில் மார்க்கெட் பற்றிய விசாரணைகள் எதுவும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் படத்தின் மார்க்கெட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில்,2027ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும்,இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,புருஷன் படத்தின் தற்போதைய வியாபார நிலவரம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.படம் தியேட்டர்களில் வெளியாகும்போது இந்த நிலை மாறுமா? மீண்டும் இந்தக் கூட்டணி வெற்றியை பெறுமா?என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




