தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இவர் இயக்கிய நாயகன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
கமல், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த திரைப்படம். அவருக்கு திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் இது.
மும்பையில் நடந்த ஒரு உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தை முக்தா பிலிம்ஸ் தயாரித்தது. அந்த சமயத்தில் இந்தப் படத்தை எடுப்பதற்காக மணிரத்னம் ஏகப்பட்ட செலவு செய்ததாக முக்தா பிலிம்ஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.
இதன் காரணமாக அவர் மீது தயாரிப்பு நிறுவனத்திற்கு சிறு அதிருப்தியும் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. பொதுவாக மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். அப்படி காட்சிகள் வரும் வரை அவர் நடிகர்களை விட மாட்டார்.
அவருக்கு திருப்தி அளித்தால் மட்டுமே அடுத்த காட்சிகள் படமாக்கப்படும். ஆனால் முக்தா பிலிம்ஸ் அப்படி கிடையாது கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்யும் தயாரிப்பு நிறுவனம். இதனால் இருதரப்பினருக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது.
ஒருவழியாக படம் வெளியாகி நன்றாக ஓடியது. படம் சூப்பர் ஹிட்டாக இருந்தாலும் இந்த படத்தினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை, போட்ட காசு மட்டுமே எங்களுக்கு கிடைத்தது என தயாரிப்பு நிறுவனம் அப்போது தெரிவித்தது.