ராதிகா ஆப்தே மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ என்ற நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸின் புரமோஷனுக்காக ‘Zoom’ மீடியாவுக்கு அளித்த நேர்காணலில், ராதிகா ஆப்தே தான் நடித்த தெலுங்குத் திரைப்படம் குறித்துப் பேசியிருந்தார்.
அந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் தாய்மாமனைத் திருமணம் செய்துகொள்வது போன்ற வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், வயதில் மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்த அனுபவம் மற்றும் கதையின் இடையிலேயே தனது கதாபாத்திரம் இறந்துவிடுவது போன்ற விஷயங்கள் தனக்குக் கடினமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராதிகா ஆப்தே பேசிய இந்த வீடியோவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘சத்யவான் சாவித்ரி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ராதிகா ஆப்தே ‘மாமா’ என்று குறிப்பிட்டது முதலில் தனக்குப் புரியவில்லை என்றும், பின்னர் அது தென்னிந்தியாவில் உள்ள ‘முறை மாமன்’ திருமண வழக்கம் என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இந்த வழக்கம் இல்லாவிட்டாலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இத்தகைய கலாச்சாரம் இருப்பதாகவும், கர்நாடகாவில் இந்த வழக்கம் உள்ளதா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நமது கலாச்சாரத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கத்தான் முடியுமே தவிர, அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்: தனது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவோ அல்லது குறைத்துப் பேசவோ மாட்டேன் என்றும் கீர்த்தி சுரேஷ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.




