அந்த கால திரைப்படங்களில் எல்லாம் நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை ரசிகர்கள் மிகவும் ரசித்து வரவேற்றனர். இதனால் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் அப்படிப்பட்ட கேரக்டர்களில் அதிகமுறை நடித்திருக்கின்றனர்.
அதன் பிறகு கமல், ரஜினி, பிரபு போன்ற நடிகர்கள் எல்லாம் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் ஆர்வத்துடன் நடித்தனர். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட ரோல்களை இப்போது இருக்கும் நாயகர்கள் அதிகம் விரும்புவது கிடையாது. இப்போது இருக்கும் தமிழ் சினிமா ஹாரர், காமெடி என்று மாறி இருக்கிறது.
ஆனால் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒரு நடிகர் மட்டும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நடிகர் சூர்யா தான். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு படங்கள் இதுபோன்று கதை அமைப்பில் வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. அந்தப் படங்களின் வரிசையை பற்றி காண்போம்.
பேரழகன்: சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களை ஏற்று நடித்து இருப்பார்கள். அதில் சூர்யா ஊனமுற்ற ஒரு கேரக்டரிலும், ஆன்ட்டி ஹீரோவாக ஒரு கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார்.
வேல்: 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா அண்ணன், தம்பி என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். ஹரி இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.
வாரணம் ஆயிரம்: இது 2008ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம். இப்படத்தில் சூர்யா அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
ஏழாம் அறிவு: 2011 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திரைப்படமாகும். இதில் சூர்யா போதிதர்மர், அரவிந்த் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மாற்றான் 2012ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தில் சூர்யா இரு கேரக்டரில் நடித்திருப்பார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா இதில் அற்புதமாக நடித்திருப்பார்.
மாசு என்கிற மாசிலாமணி: 2015ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதில் சூர்யா அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருப்பார். காமெடி கலந்த திகில் திரைப்படமாக இது உருவாகி இருந்தது.