தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். இவர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், சரிதா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல சீரியல்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய திரைப்படங்கள் நம்மால் என்றும் மறக்க முடியாதது.
எதிர்நீச்சல்: காமெடி டிராமாவாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்து இருப்பார். அவருடன் இணைந்து முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், மனோரமா, ஜெயந்தி, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். ஏழை மாணவனாக இருக்கும் நாகேஷ் தன் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருக்கும். 1968 இல் வெளிவந்த இந்தப்படம் நாகேஷுக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
அவள் ஒரு தொடர்கதை: தன் குடும்பத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இப்படம். இதில் கதையின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுஜாதா அறிமுகமாகி இருந்தார். அவருடன் இணைந்து கமல்ஹாசன், விஜயகுமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுஜாதா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்தார்.
அபூர்வ ராகங்கள்: கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மட்டும் அல்லாமல் கமல்ஹாசனுக்கும் கூட ஒரு மறக்க முடியாத திரைப்படமாகும். கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கி சாதனை படைத்தது.
வறுமையின் நிறம் சிகப்பு: வறுமையின் பிடியில் இருக்கும் மூன்று இளைஞர்களை பற்றிய கதை தான் இப்படம். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, எஸ் வி சேகர், திலிப் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார்கள். இப்படத்தின் சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பிற்காக பாலச்சந்தர் மற்றும் கமல் ஆகியோருக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.
தில்லு முல்லு: ரஜினியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நமக்கு காட்டிய திரைப்படம் இது. முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மாதவி, தேங்காய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். சந்திரன், இந்திரன் என்று இரு வேடங்களில் ரஜினி செய்யும் தில்லுமுல்லு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது. இன்றுவரை ரஜினிக்கு இப்படம் ரொம்ப ஸ்பெஷல் திரைப்படமாக இருக்கிறது.