கிரிக்கெட் ரசிகர்களுக்கு சில கூட்டணிகள் எப்போதுமே மறக்க முடியாதவை.அந்த வகையில் 2000-களில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஜோடி மீண்டும் களத்தில் இறங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள கேசலிஸ் மைதானத்தில் நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டி20 கோல்ட் கிளாஷ் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் ரக்பி,ஆஸ்திரேலிய கால்பந்து ஜாம்பவான்கள் என இரு அணிகளாகப் பிரிந்து விளையாடிய இந்தப் போட்டியில், டீம் கிரிக்கெட் அணிக்காக கில்கிறிஸ்ட் மற்றும் ஹெய்டன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து பேட்டிங் செய்வதைப் பார்த்த ரசிகர்கள்,தங்களுடைய பழைய கிரிக்கெட் நினைவுகளை மீண்டும் பகிரத் தொடங்கினர்.இந்த ஜோடி முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது.கில்கிறிஸ்ட் 18 பந்துகளில் 25 ரன்களும், ஹெய்டன் 18 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.இறுதியில் டீம் கிரிக்கெட் 176 ரன்கள் எடுத்தது.இருப்பினும்,டீம் ஃபுட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும், கில்கிறிஸ்ட் – ஹெய்டன் கூட்டணியை மீண்டும் பார்த்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.




