திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கோலிவுட்டில் மறக்க முடியாத 9 ஜோடிகள்.. இப்போதும் ட்ரெண்டாகும் சின்னத்தம்பி பிரபு, குஷ்பூ

வணக்கம் சினிமாபேட்டை ரசிகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போவது தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளாக விளங்கியவர்கள் பற்றி. இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த, மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திரை ஜோடிகளை காணலாம்.

எம்ஜிஆர் – சரோஜாதேவி :
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் எம்ஜிஆர் அவர்களின் திரை ஆளுமையை பற்றியோ அவரது ரசிகர்கள் பற்றியோ தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை. அவர் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்திருந்தபோதும் சரோஜாதேவியுடன் 27 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவற்றில் ஏறக்குறைய எல்லாமே மாபெரும் ஹிட். அந்த காலத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஜோடி என்றால் அது எம்ஜிஆர், சரோஜாதேவி என்பதில் சிறிதளவும் மாற்றமில்லை. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?

சிவாஜி கணேசன் – பத்மினி :
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாட்டிய பேரொளி பத்மினியும் சிறந்த ஜோடிகளாக பல படங்களில் தோன்றியுள்ளனர். என்றாலும் இவர்கள் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் கிளாசிக் அந்தஸ்தைப் பெறுகிறது. இவர்கள் இருவரும் அந்தப் படத்தில் கண்ணால் பேசிக் கொள்வதும் கலையால் பதில் சொல்வதும் என்று அருமையான ஜோடிகளாக விளங்கினர் என்பதில் ஐயமில்லை.

ரஜினிகாந்த் – ஸ்ரீபிரியா :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப காலங்களில் அதிகம் நடித்தது ஸ்ரீபிரியா உடன். திரையில் ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக ஸ்ரீபிரியா விளங்கினார். இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வந்தபோதும் பில்லா திரைப்படம் அதிகமான கவனத்தைப் பெறும். இந்த படத்தில் பில்லா கதாபாத்திரத்திற்கு இணையாக ஸ்ரீபிரியாவும் துப்பாக்கிகளை கையாள்வதும், மிரட்டலாக நடிப்பதும் என்று பட்டையைக் கிளப்பி இருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக அப்போது செய்திகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் – ஸ்ரீதேவி :
கமலும் ஸ்ரீதேவியும் இருபத்தொரு படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர். அதிலும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் இவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது தனிச்சிறப்பு. மூன்று முடிச்சு, குரு, வாழ்வே மாயம் என்று இவர்கள் நடித்த பல திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்ற போதும் நம் மனதில் நீங்காத இடம் பிடிப்பது பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை. இந்த படத்தை பார்ப்பவர்கள் யாரும் கமலும் ஸ்ரீதேவியும் நிஜத்திலும் காதலர்களோ அல்லது தம்பதிகளோ என்றே நினைக்கத் தோன்றும்.

சத்யராஜ் – பானுப்ரியா :
கொங்கு தமிழில் அலப்பரை செய்து நடிக்கும் சத்யராஜுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடிக்க தகுதியானவர் பானுப்பிரியா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள பிரம்மா, பங்காளி போன்ற திரைப்படங்கள் காமெடியின் உச்சம். சத்யராஜின் உயரத்திற்கு பொருத்தமாகவும் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபு – குஷ்பு :
ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஜோடி என்றால் அது பிரபு குஷ்பு தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சின்னத்தம்பி திரைப்படம் 250 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடியது என்றால் அது அவர்களது ஜோடிக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் அளவிற்கு சென்று விட்டதாக கூட அன்றைய நாளிதழ்கள் கூறியது.

ராமராஜன் – கனகா :
கிராமப்புற நாயகன் ராமராஜனுக்கு கனகா சிறந்த ஜோடியாக பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார். என்றாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கரகாட்டகாரண் திரைப்படம் 366 நாட்கள் ஓடி வெற்றி கரமான சாதனையை படைத்தது. இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த காதல் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தது. இவர்கள் இருவருக்குள்ளும் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அனைத்தும் சிறப்பாக இருந்ததாக அப்போதைய நாழிதழ்கள் எழுதின.

விஜயகாந்த் – ராதிகா :
விஜயகாந்தும் ராதிகாவும் 6 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நானே ராஜா நானே மந்திரி திரைப்படத்தில் டீச்சராக வரும் ராதிகாவை இறுதியில் கரம்பிடிப்பார் விஜயகாந்த். அதுபோல நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் தம்பதிகளாக மாறுவார்கள் என்று அப்போதைய நாளிதழ்கள் கணித்துச் சொன்னது.

ராம்கி – நிரோஷா :
திரையிலும் நிஜத்திலும் சரியான ஜோடியாக விளங்கியது ராம்கி நிரோஷா மட்டுமே. செந்தூரப்பூவே திரைப்படத்தில் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடித்ததில் இருந்தே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் தங்களது திரை வாழ்க்கையை மட்டுமே மனதில் கொள்ளாமல் இல்லற வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணம் செய்து இன்றுவரை சிறப்பான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.

திரையில் தோன்றிய 2000க்கு முன்பான சிறந்த ஜோடிகளை இங்கே காணலாம். 2000 வருடத்திற்கு பின்பு சிறப்பாக அமைந்த ஜோடிகளை அடுத்த கட்டுரையில் காணலாம்.

Trending News