கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புக்கு எப்படி கம்பேக் கொடுத்ததோ அதேபோல வெங்கட்பிரபுவுக்கும் மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. மாநாடு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.
மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அசோக்குமார் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மன்மதலீலை. இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்து ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வெங்கட் பிரபு மாநாடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவை ஹீரோவாக வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக பேச்சுக்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் இப்போது அது மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக் இல்லை, நாக சைதன்யாவை வைத்து எடுக்கப்படும் சுத்தமான தெலுங்கு படம் என கூறப்படுகிறது.
இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நாக சைதன்யா, பூஜா ஹெக்டே இருவரும் இணையுள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறார் வெங்கட்பிரபு.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் வெங்கட் பிரபு. சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி வருகிறது. இதனால் தமிழ் ஹீரோக்களுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
அதேபோல் இப்பொழுது அனைத்து படங்களையும் தெலுங்கிலும் எடுக்க தமிழ் சினிமா துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வெங்கட்பிரபுவும் தெலுங்கு படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.