திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

80-களில் நெருங்க முடியாத உச்சத்தைத் தொட்ட விஜயகாந்த்.. இப்ப கூட யாராலும் தொட முடியலையாம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் விஜயகாந்த். அதன் பிறகு அவர் தீவிர அரசியலுக்குள் நுழைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இப்போது அவரை ரசிகர்கள் எங்கும் பொதுவெளியில் காண முடிவதில்லை.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் தற்போது தன் வீட்டிலேயே பூரண ஓய்வில் இருந்து வருகிறார். அரசியலில் ஈடுபட்ட காரணத்தினால் நடிப்பதை நிறுத்தி விட்ட அவர் தற்போது எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

ஒருகாலத்தில் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தன்னுடைய பெயரை நிலை நாட்டியவர் விஜயகாந்த். இவருடைய சினிமா வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவர் செய்த பல சாதனைகள் நமக்கு தெரியவரும். 80 கால கட்டங்களில் மிகவும் பிஸியாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த். 1985 ஆம் வருடம் மட்டும் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துள்ளார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி ஒரே வருடத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். ஆனால் அந்த படங்களில் எல்லாம் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பது கிடையாது. வில்லன், கௌரவ தோற்றம், குணச்சித்திரம் இப்படி பல கேரக்டர்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ஆனால் விஜயகாந்த் 1985ல் மட்டும் ஹீரோவாக 20 படங்களில் நடித்துள்ளார். இந்த சாதனையை இதுவரை தமிழில் எந்த நடிகரும் நிகழ்த்தியது கிடையாது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல நல்ல விஷயங்களையும் மேற்கொண்டுள்ளார். அப்போது நடிகர் சங்க கட்டிடம் பல கடனில் சிக்கித் தவித்து மூழ்கும் நிலையில் இருந்தது.

அப்போது தலைவராக இருந்த விஜயகாந்த் தான் பல முயற்சி எடுத்து அந்த இடத்தை காப்பாற்றினார். அதுமட்டுமல்லாமல் துணை நடிகர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ள இவரின் மேல் இப்போது வரை அவர்களுக்கு தனி மரியாதை உண்டு. சொல்லப்போனால் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் தான் தங்களுக்கு பொற்காலம் என்று இன்னும் கூறி வருகின்றனர்.

Trending News