முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. சுல்தான் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து கார்த்தியை திரையில் பார்த்த அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வழக்கமாக கிராமத்து கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பும் கார்த்தி இந்த படத்தில் அதிரடி ஆட்டத்துடன் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் விருமன் திரைப்படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் படத்தில் எமோஷனல் மற்றும் காமெடி காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், கார்த்தியின் ரகளையான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் அதிதி சங்கர் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் கார்த்திக்கு இணையாக கலக்கி இருப்பதாகவும், அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த வகையில் அதிதிக்கு இது சரியான அறிமுகப்படம் என்றும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவரை நிச்சயம் காணலாம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வழக்கமாக முத்தையாவின் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் நிறைந்துள்ளது. அதிலும் முதல் பாதி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்வதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அப்பா, மகன் இருவருக்கு இடையே இருக்கும் காட்சிகளும், கார்த்தியின் அலட்டல் இல்லாத நடிப்பும், இடைவேளை காட்சியும் ஃபயராக இருப்பதாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

மேலும் இரண்டாம் பாதி சென்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது. ஆக மொத்தம் விருமன் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறது. பருத்திவீரன், கொம்பன் வரிசையில் கார்த்திக்கு இந்த கிராமத்து கதைக்களமும் வெற்றியை கொடுத்துள்ளது.

