ரஜினிகாந்த் நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பல சுவாரசியமான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. முதலில் தேசிங்கு பெரியசாமி நீண்ட காலம் கதை தயார் செய்து காத்திருந்தாலும், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது.
அதன்பின்னர், இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாகப் பேசப்பட்டது. ஆனால், தயாரிப்புத் தரப்பான கமல் ஹாசனின் ராஜ்கமால் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் சுந்தர் சி-க்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகச் சுந்தர்.சி இத்திட்டத்திலிருந்து விலக நேரிட்டது.
சுந்தர் சி-க்கு அடுத்தபடியாக ‘டான்’ திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் ரஜினிக்கு ஏற்ற ஒரு மாஸ் கதையைக் கூறியபோதிலும், அது கமலுக்கும் ரஜினிக்கும் முழுமையான திருப்தியை அளிக்காததால் அந்த வாய்ப்பும் கைநழுவியது.
இப்படி மூன்று முன்னணி இயக்குநர்களின் கதைகளும் திட்டங்களும் மாற்றப்பட்ட பிறகே, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பக்கம் கவனம் திரும்பியது. அஸ்வத் மாரிமுத்து கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, அவர் கமலிடமும் இக்கதையைக் கேட்குமாறு பரிந்துரைத்தார்.
அஸ்வத் மாரிமுத்து தயாரித்துள்ள இக்கதைக்களம், மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை மையமாகக் கொண்டு, தற்கால Gen-Z ரசனைக்கு ஏற்ற விறுவிறுப்பான ஆக்ஷன் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்த இந்த சமூகக் கருத்து சார்ந்த கதையும், அதில் உள்ள மாஸ் அம்சங்களுமே ரஜினி மற்றும் கமல் இருவரையும் உடனடியாகக் கவர முக்கியக் காரணமாக அமைந்தது.
மூன்று பெரிய இயக்குநர்களை தூக்கிவிட்டு, அஸ்வத் மாரிமுத்து போன்ற ஒரு இளம் இயக்குநரின் கதையை தேர்வு செய்தது சரியானதா என்பதைப் படம் திரைக்கு வரும்போதுதெரியும். இருப்பினும், நெல்சன், லோகேஷ் கனகராஜ் வரிசையில் மற்றொரு இளம் இயக்குநருடன் கைகோர்த்துள்ள ரஜினியின் இந்த முயற்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




