நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் தான்.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா, இசைக்கு அனிருத் என தயாரிப்பு தரப்பு மிகவும் பிரமாண்டம் காட்டியுள்ளது. படமும் அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் படத்தின் நீளம் தான் தற்போது ரசிகர்களை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக இரண்டு மணி நேரம் படங்களே ரசிகர்களுக்கு போதுமானதாக இருந்து வருகிறது. அதுவுமில்லாமல் வெப்சீரீஸ், யூடியூப் வீடியோக்கள் என குறைந்த நேரத்தில் ரசிகர்கள் பார்க்கப் பழகிக் கொண்டனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல நீண்ட நேரம் ரசிகர்களை உட்கார வைத்து வெறுப்பேற்றி விடுவார்களோ என கோலிவுட் வட்டாரங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என சமாதானம் கூறிக் கொண்டாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது கொஞ்சம் வருத்தம்தான்.
100% பார்வையாளர்களை அனுமதிக்க விடுவார்கள் என நம்பி மாஸ்டர் படக்குழு உலகம் முழுவதும் தங்களுடைய விளம்பரத்தை தொடங்கிய நிலையில் இன்னும் தமிழக அரசு அதற்கு செவி சாய்க்காமல் இருப்பது படக்குழுவினருக்கு கடைசி நேரத்தில் பீதியை கிளப்புவது போல் ஆகிவிட்டதாம்.
இருந்தாலும் இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என நம்பி அரசின் அறிவிப்புக்கு வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.