கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு பலரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சமீபத்திய பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வசூல் மழை பொழிந்து வருகிறது.
இதனால் மீண்டும் தியேட்டர் தொழில்கள் சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் புதிய படங்கள் வரை தியேட்டர் ரிலீசுக்கு ரெடி ஆகி வருகின்றன.
மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படம்தான். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாம். அதே தேதியில் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியாக உள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாகவே வருகின்ற குடியரசு தின விழாவையொட்டி ஜீவா மற்றும் அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படமும், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் கபடதாரி படமும் வெளியாக உள்ளதாம்.
இவை இரண்டுமே சிறிய படங்கள் என்பதால் அடுத்ததாக மிகப் பெரிய வசூலை வாரி குவிக்க வாய்ப்புள்ள படமாக தனுஷின் ஜகமே தந்திரம் படம்தான் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேரத்தில் எந்த குளறுபடியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தியேட்டர்காரர்கள் உஷாராக இருந்து வருகிறார்களாம்.
அதுமட்டுமில்லாமல் OTT தளங்களிலும் பல நடிகர்களின் புதிய படங்கள் வெளியாக உள்ளதாம். என்னதான் தியேட்டர் திறந்தாலும் OTTயை நம்பி பல படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.