மோகன்லால் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படம் தியேட்டரில் வரவில்லை என பல ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.
ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினர். இதனை அமேசான் நிறுவனம் நேரடியாக வாங்கி தங்களுடைய பிரைம் தளத்தில் வெளியிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு த்ரிஷ்யம் 2 படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்பட்டு விட்டார்களாம்.
அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருந்ததாக பார்த்த அனைவரும் புகழ்ந்து தள்ளினர். இதன் காரணமாக தற்போது திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திரிஷ்யம் 2 படம் பல கோடி லாபம் சம்பாதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான திரிஷ்யம் 2 படத்தை அமேசான் நிறுவனம் 25 கோடி கொடுத்து வாங்கியது. அதனை தொடர்ந்து படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே சமீபத்தில் 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு உரிமை 10 கோடிக்கு விற்பனையாகி பிரம்மிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 20 கோடி பட்ஜெட்டில் உருவான திரிஷ்யம் 2 படம் 30 கோடிக்கு மேல் லாபம் மட்டுமே சம்பாதித்துள்ள நிலையில் இன்னும் மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமையை விற்றால் லாபம் 50 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
சமீபகாலமாக மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அனைத்துமே பல கோடி லாபம் சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழ் சினிமாவிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்களாம்.