தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆணழகன் என்ற பட்டத்துடன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனி முத்திரை பதித்தவர் நடிகர் பிரசாந்த். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த வெற்றி படம் என்றால் அது வின்னர் தான்.
அதன்பிறகு படிப்படியாக தன்னுடைய மார்க்கெட் குறைந்து இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். பிறகு ஷாக் என்ற த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்து சினிமாவுக்குள் வந்தவர் அதன்பிறகு அதலபாதாளத்திற்கு சென்று விட்டார்.
மோசமான கதை தேர்வு, பருமன் கொண்ட உடல் என ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஹீரோவாக மாறினார். இடையில் அவ்வப்போது தெலுங்கு சினிமாக்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு அந்தகன் என தமிழில் பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை முதலில் மோகன்ராஜா இயக்க இருந்த நிலையில், அதன்பிறகு பொன்மகள்வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் என்பவர் ஒப்பந்தமானார்.
தற்போது கடைசியாக இவர்கள் இருவருமே அந்தகன் படத்தை இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குனராக அந்தகன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அப்பா மகன் இருவருக்குமே ரீ-என்ட்ரி கொடுக்கும் படமாக இருப்பதால் படத்தின் மீது கூடுதல் அக்கறை எடுத்து உருவாக்க உள்ளார்களாம். மேலும் இந்த படத்தில் பிரசாந்த் உடல் எடையை குறைத்து மீண்டும் சாக்லேட் பாய் தோற்றத்திற்கு மாறியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.