தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாகவே பல படங்களை படைத்து கோலிவுட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசன், கமலஹாசன் போன்ற அற்புதமான நடிகர்களை அறிமுகப்படுத்தியதும் இந்நிறுவனமே. அத்தகைய பெருமைக்குரிய ஏவிஎம் நிறுவனம் 1940ஆம் ஆண்டில் இருந்து பல படங்களை தயாரித்து தற்போது சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கப் போவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரான எம் சரவணன் பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் தற்போது காலம் மாறி ட்ரெண்ட்டாகிவிட்டதால், அதற்கேற்றார்போல் படமெடுக்க, அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறதாம். அப்படியே படம் எடுத்தாலும் தியேட்டர்கள் கிடைப்பது, டிஸ்ட்ரிபியூஷன் ஆகியவை அரிதான விஷயமாகவும் இருக்கிறது.
அத்துடன் இயக்குனர்கள் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி, அதன் பின் தங்கள் சம்பளத்தையும் உயர்த்தி கேட்பதும் நிகழ்கிறது. எனவே ஒரு படம் உருவாகுவதற்கு குறைந்தது 4 கோடியாவது தேவைப்படுகிறது. இதில் ஹீரோக்களின் சம்பளத்தை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுற்றும். இந்த சூழலில் படம் எடுத்து சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதால், கொஞ்சகாலம் சும்மா இருந்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டதாம் ஏவிஎம் நிறுவனம்.
இருப்பினும் எக்கச்சக்கமான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்களை உருவாக்கிய ஏவிஎம் நிறுவனம் தற்போது படங்களை தயாரிக்க போவதில்லை என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம் சரவணன் தெரிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் அரை நூற்றாண்டிற்கு மேல் சினிமாவின் சாம்ராஜ்யம் செய்து கொண்டிருந்த ஏவிஎம் நிறுவனம், தற்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது சினிமாவிற்கு கிடைத்த நஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.