தமன்னா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது நவம்பர் ஸ்டோரி எனும் வெப் சீரிஸ். இதில் தமன்னாவுடன் பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ், ஜிஎம் குமார், மைனா நந்தினி போன்றோர் நடித்துள்ள இந்த வெப் சீரிசை புதுமுகம் ராமசுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.
நவம்பர் ஸ்டோரி விமர்சனம்: அனுராதா என்ற கம்ப்யூட்டர் நிபுணர் கதாபாத்திரம் தமன்னாவுக்கு. அவரது தந்தையாக ஜிஎம் குமார் நடித்துள்ளார். இவருக்கு அல்சைமர் என்ற ஞாபக மறதிநோய் உள்ளது. அந்த நோயை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக குடியிருக்கும் வீட்டை விற்க முயற்சி செய்கின்றனர். அதற்கான முயற்சியில் தமன்னாவும், விவேக் பிரசன்னாவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் அவர்களது வீட்டிற்குள் பேனாவால் குத்தப்பட்டு இளம்பெண் ஒருவர் இறந்து கிடக்கிறார்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலில் பெயிண்ட்டை ஊற்றி கொலை சம்பந்தப்பட்ட தடயங்களை அழிக்க முயற்சி செய்துள்ளனர். இதை விசாரிக்கும் நபராக வருபவர்தான் பசுபதி.
அடிப்படையில் எழுத்தாளரான தமன்னாவின் தந்தை ஜி எம் குமார் தான் இந்த கொலையை செய்திருப்பார் என்ற நோக்கத்தில் போலீசார் விசாரிக்க ஆரம்பிக்கையில் தான் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது. இருந்தாலும் இதுவரை பார்த்து சலித்து புளித்து போன அதே சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை தான் இதிலும் கையாண்டுள்ளனர்.
வழக்கமாக கிளாமரில் பட்டையை கிளப்பும் தமன்னா இந்த வெப்சீரிஸில் கொஞ்சம் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஏழு பாகங்களாக வெளியான இந்த வெப் சீரீஸ் முதலுக்கு மோசமில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
ஹாலிவுட் லெவெல் க்ரைம் ஸ்டோரி என பில்டப் கொடுத்தாலும் தமிழ் சினிமாவை தாண்டவில்லை என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆகையால் பெரிய எதிர்பார்ப்பில் பார்க்காமல் சாதாரண சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் என்பதை போன்று பார்த்தால் ஏமாற்றம் இருக்காது.