பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான் பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். தற்போது தி பாரஸ்ட் கேம்ப் என்ற ரீமேக் படத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவ் மற்றும் மகன் அசாத் ராவ் கான் உடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்களின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கணவன், மனைவி இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அமீர்கான் – கிரண் ராவ் கூறியதாவது, “இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்,மனைவியாக நீடிக்கப் போவதில்லை. ஆனால், சக பெற்றோராக, குடும்பமாக இணைந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே நாங்கள் பிரிவதற்கு திட்டமிட்டு இருந்தோம். தற்போது தான் அதை முறைப்படுத்துவதற்கான சூழல் அமைந்தது.

எங்கள் மகன் ஆசாத்துக்கு ஓர் அர்ப்பணிப்பான பெற்றோராக நாங்கள் நீடித்திருப்போம். அவனை நாங்கள் இருவரும் சேர்ந்தே பராமரித்து வளர்ப்போம். திரைப்படங்களிலும், பாணி அறக்கட்டளை உள்ளிட்ட வேலை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.
எங்கள் நலம் விரும்பிகளிடம் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம். எங்களைப் போலவே நீங்கள் விவாகரத்து என்பதை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கமாகப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் விவாகரத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.