கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானதே காரணமாகும். தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக், படப்பிடிப்பு குறித்த தகவல் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.
இந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக விஜயை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறார்.
மேலும், தற்போது விஜய்க்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் நிலவி வருவதால், இந்த சமயத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்தை முடித்த பின்னர் புதிய படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் அப்டேட் மழையில் நனைந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் செம கடுப்பில் இருக்கிறார்கள் என தெரிகிறது.