பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவும் தங்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து, ” இந்து பெண்ணான கிரண் ராவை இஸ்லாமியரான அமீர்கான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களது இரு குழந்தைகளும் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர். ஏன் ஒருவர் இந்துவாகவும், ஒருவர் இஸ்லாமியராகவும் வளர்க்கப்பட வில்லை? இஸ்லாமியரை திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண் ஏன் இந்துவாக தொடர முடிவதில்லை? இந்த பழமையான நடைமுறையை நாம் மாற்ற வேண்டும்” என கங்கனா பதிவிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி, “ஒரு குடும்பத்தில் இந்து, சமணம், பவுத்தர்கள், சீக்கியர்கள், ராதாஸ்வாமி மற்றும் நாத்திகர்கள் ஒன்றாக வாழ முடியும் என்றால், ஏன் இஸ்லாமியர்களால் மட்டும் அது முடியவில்லை?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விவாகரத்து என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான ஒரு விஷயம். இதில் சம்பந்தமே இல்லாமல், மதத்தை நுழைத்து தேவையில்லாத சர்ச்சைகளை கங்கனா ரனாவத் ஏற்படுத்தி வருவதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.