தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் பல வெற்றிப் படங்களை வழங்கி இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது தீனா படம் தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பின்னர் தான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என கூப்பிட தொடங்கினர். தீனா படத்தில் அஜித்தின் அடியாட்களில் ஒருவராக சம்பத் ராவ் நடித்திருப்பார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தீனா படத்தில் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில், “தீனா படத்தில் நடித்த பிறகு தான் மக்கள் என்னை அங்கீகரித்தார்கள். அஜித் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.
தீனா படத்தில் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக் என்னுடையது தான். ஆனால் துரதிஷ்டவசமாக அதை விற்க வேண்டியதாகி விட்டது. ஒரு சமயம் மிக கடுமையான பண கஷ்டத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் என்னால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல், வாடகை பணத்தை கொடுப்பதற்காக அந்த பைக்கை விற்றேன்” என மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார். சம்பத் ராவ், அஜித் நடித்த சிட்டிசன், சூர்யா நடித்த சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் ரவுடி கேரக்டரில் நடித்துள்ளார். அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் திகழ்ந்து வருகிறார்.
அதே சமயம் தன்னை தேடி வருபவர்களை கணிவுடனும், ஊக்கமளிக்கும் வகையிலும் பேசக் கூடியவர். அதனாலேயே சினிமாவை தாண்டி, பலரின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார்.