சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, தனுஷ் போன்றவர்களை உதாரணமாக கூறலாம். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, அசுரன், கர்ணன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
சூரரைப்போற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முன்னதாக பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான பிதாமகன், நந்தா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான படங்களாக இவ்விரு படங்களும் இன்றும் உள்ளன.
அந்த அளவிற்கு பாலா சூர்யாவின் நடிப்பு திறமையை இப்படங்களில் வெளிப்படுத்தியிருப்பார். எனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள புதிய படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சூர்யாவின் பிறந்தநாள் நாளை என்பதால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.