தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களை வழங்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். சினிமாத்தனத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை யதார்த்தத்தை நோக்கி திருப்பியது இவரது படங்கள். இவர் இயக்கத்தில் வெளியான காதல் படம் தமிழ் சினிமாவின் அபூர்வமான படைப்புகளில் ஒன்று.
அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியான சமுராய், கல்லாரி போன்ற படங்கள் எதார்த்தத்தை வழங்கின. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வழக்கு எண் 18/9. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படம் பலரது பாராட்டையும் பெற்றது.
ஒரு இயக்குனரின் படைப்பு, பாராட்டை பெறுகையில் அவருக்குள் புதிய படம் குறித்து ஏற்படும் பதட்டமும், எச்சரிக்கையும் வழக்கு எண் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பார்க்க முடியும். இந்த பதட்டம் படம் இயக்குவதை தள்ளிப்போடவும் வைக்கும்.
அதுதான் பாலாஜி சக்திவேலின் வாழ்க்கையிலும் நடந்தது. அடுத்த படத்தை இயக்க கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இவர் எடுத்து கொண்டுள்ளார். நடுவில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என இரு படங்களை அறிவித்தார். ஆனால், இரண்டும் அறிவிப்போடு நின்றது.
தற்போது ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். படத்துக்கு நான் நீ நாம் என பெயர் வைத்துள்ளார். வீரா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடிக்க, சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜாவித் ரியாஸ் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி, லலிதானந்த் இருவரும் எழுதுகிறார்கள். ப்ளூமூன் கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் என்பதால் திரையுலகினர் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.