சினிமாவில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு அதிக அளவில் இருப்பதாக சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி சமீபத்தில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஏன் நடிகைகளுக்கு வழங்கப்படுவதில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இவரைத் தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுப்பதில் முக்கியமானவர் என்றால் நடிகை தீபிகா படுகோன். உச்ச நடிகர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என ஊதிய சமமின்மை குறித்து நடிகை தீபிகா படுகோனே பல சமயங்களில் பேசியுள்ளார்.
கதாநாயகனுக்கு நிகராக தனக்கும் ஊதியம் வேண்டும் என்று பாலிவுட்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தீபிகா, பாலிவுட்டின் சில நடிகர்களை விடவும் அதிக ஊதியத்தை அவர் பெற்று வருகிறார்.
இந்நிலையில், பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி, பைஜு பாவ்ரா என்னும் பெயரில் புதிய படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் நாயகனாக பலரது பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது ஆஸ்தான நாயகனான ரன்வீர் சிங்கையே சஞ்சய் லீலா நடிக்கவைக்க உள்ளார்.
இந்நிலையில், ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக அவரது மனைவி தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க பேசியுள்ளனர். ஆனால், தனது கணவருக்கு சமமான ஊதியம் வேண்டும் என தீபிகா நிபந்தனை விதித்ததால், இப்படத்தில் தீபிகாவை நடிக்கவைக்கும் எண்ணம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக சஞ்சய் லீலா இயக்கிய பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய மூன்று படங்களிலுமே ரன்வீர்-தீபிகா ஜோடி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரின் நடிப்பிற்காகவே ரசிகர்களின் மனதில் இந்த படங்கள் இடம்பெற்றன. ஊதிய சமமின்மைக்கு எதிராக குரல் கொடுத்த தீபிகாவிற்கே இந்த நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.