தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்கள் பட்டியலில் நடிகர் தனுஷும் ஒருவர். இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு பலரின் பாராட்டையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷுக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தனுஷ் ஹிந்தியில் அக்ஷய்குமாருடன் நடித்துள்ள அந்த்ராங்கி ரே படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அதேபோல் தமிழில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக மித்ரன் ஜஹகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தனுசுக்கு 44வது படமாகும். இப்படத்தை முடித்துவிட்டு பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 1950 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடப்பது போன்று உண்மை சம்பவங்கள் கொண்ட படமாக இப்படம் தயாராவதாக இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் ஆந்திரா தனி மாநிலமாக பிரிவதற்கு முன்னால் தெலுங்கு பேசுபவர்களும், தமிழர்களும் மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றாக வாழ்ந்ததையும், அப்போது நடந்த அரசியலையும், உரிமை போராட்டங்களையும் உள்ளடக்கிய படமாக தயாராகிறது என்றும் தனுஷ் ஏழை மக்களுக்காக போராடும் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கசிந்த கதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது வரை படக்குழுவினர் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் தனுஷ் படத்தின் கதை இணையத்தில் கசிந்து உள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.