இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. அதில் சினிமாவும் ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் அனைத்து படங்களும் அமேசான், நெட்பிளிக்ஸ், சோனி, ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
சமீபகாலமாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. என்னதான் வீட்டிலிருந்தபடி படம் பார்த்தாலும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் சுகமே தனிதான் என ரசிகர்கள் தங்கள் ஏக்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
முதன் முதலாக சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு தொடங்கி வைத்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் யாரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்தடுத்து வெளிவந்த அனைத்து படங்களும் ஓடிடியிலேயே வெளியாகின. தற்போது கூட சூர்யா தான் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் வெப் சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி படங்கள் தலைதூக்க தொடங்கி விட்டன. ஹீரோ, வில்லன் என பிசியாக வலம் வரும் விஜய் சேதுபதி கூட வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி விட்டார்.
இவரை தவிர தற்போது நடிகர் ஆர்யா அமேசான் பிரைமுக்காக ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளார். அதேபோல், நடிகர் அருண்விஜய் அறிவழகன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இத்தொடரை ஏவிஎம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. அதேபோல், நடிகர் அதர்வா ஒரு புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளார். இத்தொடரை பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கவுள்ளார்.
நடிகர்கள் மட்டுமில்லாமல், நடிகைகள் அமலாபால், ரெஜினி, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெப் தொடர்கள் இனிமேல் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.